பீப்பள்ஸ் லீசிங் வர்த்தக நாம ஊக்குவிப்பாளராக புகழ்பெற்ற நடிகர் ஹேமால் ரணசிங்க நியமனம்


இலங்கையின் முதல் தர வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங், தனது வர்த்தக நாம ஊக்குவிப்பாளராக புகழ்பெற்ற திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகரான ஹேமால் ரணசிங்க அவர்களை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஹேமால் ரணசிங்க ஆகியோர் புரிந்துணர்வு உடன்படிக்கையை பரிமாறிக் கொள்கின்றனர்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் பொரளையில் அமைந்துள்ள பீப்பள்ஸ் லீசிங் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த உடன்படிக்கையில் நடிகர் ஹேமால் ரணசிங்க மற்றும் பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் நிதிசார் தீர்வுகள் மற்றும் சேவைகளை பிரச்சாரம் செய்வதற்கு ஹேமால் ரணசிங்க பங்களிப்பு வழங்குவார்.

ஹேமால் ரணசிங்க

ஹேமால் ரணசிங்க விருதுகளை வென்ற புகழ்பெற்ற திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரமாக திகழ்கிறார். மிகவும் புகழ்பெற்ற நடிகருக்கான விருது மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது ஆகியவற்றை தெரண திரைப்பட விருதுகள் வழங்கலில் பெற்றுள்ளார். ஹிரு கோல்டன் திரைப்பட விருதுகள் வழங்கல் நிகழ்வில், மிகவும் புகழ்பெற்ற நடிகர் மற்றும் சிறந்த வளர்ந்து வரும் நடிகருக்கான விருதுகளையும் ஹேமால் பெற்றுள்ளார். சரசவி திரைப்பட கொண்டாட்டத்தின் போது நடுவர்களின் விசேட விருதை ஹேமால் பெற்றிருந்தார்.

‘Adaraneeya Kathawak’, ‘Pravegaya’, ‘Super Six’ மற்றும் ‘Dedunu Akase’ போன்ற திரைப்படங்களில் ஹேமால் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்றிருந்தன.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ‘இலங்கையர்கள் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தை அதிகளவு நன்மதிப்பு பெற்ற மற்றும் சமூக பொறுப்பு வாய்ந்த நிதிசார் நிறுவனமாக கருதுகின்றனர். சமூகத்தில் ஹேமால் ரணசிங்க தனக்கென கீர்த்தி நாமத்தை கட்டியெழுப்பியுள்ளதுடன், நாட்டின் பெருமளவான மக்களின் மனங் கவர்ந்த நடிகராக திகழ்கிறார். எனவே, வர்த்தக நாம ஊக்குவிப்பாளராக ஹேமால் ரணசிங்கவின் சேவைகளை பீப்பள்ஸ் லீசிங் வரவேற்கிறது. அவரின் ஈடுபாட்டுடன் எமது நிதிச் சேவைகள் மக்கள் மனங்களில் மேலும் உறுதியாக நிலைபெறும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்’ என்றார்.

இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமை தொடர்பில் நடிகர் ஹேமால் ரணசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ‘நிறுவனமொன்றின் வர்த்தக நாம ஊக்குவிப்பாளராக செயலாற்றுவதற்கு நான் உடன்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. பரஸ்பர நலனுக்காக இலங்கையின் முன்னணி நிறுவனமொன்றுடன் இணைந்து பணியாற்றுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். எனது நிபுணத்துவ வாழ்க்கைக்கும் இது பெறுமதி சேர்க்கும். அத்துடன், இது எனக்கு ஒரு சவாலாகவே அமைந்திருக்கும். இலங்கையின் வங்கிசாரா நிதியியல் துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் கீர்த்தி நாமத்தில் மேலும் பெறுமதியை சேர்ப்பது என்பது, முதல்தர திரைப்படம் ஒன்றில் நடிக்கும் போது எழும் சவாலுக்கு நிகரானதாக காணப்படுகிறது’ என்றார்.

சபரி இப்ராகிம், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பொது மேலாளர், பிஎல்சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்

1995ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது.

கம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காக, பிட்ச் ரேட்டிங் லங்கா பிஎல்சிக்கு AA- (lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. இதில் ஒன்று தரநிலை மற்றும் ஏழையின் (‘B+/B’) க்கு நிகரானதாக அமைந்துள்ளது. மற்றையது ஃபிட்ச் ரேட்டிங் இன்டர்நேஷனலின் (‘B’) தரப்படுத்தலாகவும் அமைந்துள்ளது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விசேட நிதிச் சேவைகளில், லீசிங், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், தனிநபர் மற்றும் வியாபார கடன்கள் மற்றும் இஸ்லாமிய நிதிச் சேவைகள் போன்றன அடங்குகின்றன.

இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ- ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.